தற்போது நிலவும் எல் நினோ காலநிலை நிலைமைகளால் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.எல் நினோவின் தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட அமைச்சரவை உபகுழுவின் நான்காவது கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, காலநிலை மாற்றங்களால் ஏற்படக்கூடிய வேலை இழப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாதகமான காலநிலை காரணமாக தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உதவுவது மற்றும் வேலை இழக்க நேரிடுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.இதனிடையே, எல் நினோவின் தாக்கம் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, மரக்கறி மற்றும் பழப் பயிர்ச்செய்கையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து, நாட்டில் மரக்கறி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஆராயப்பட்டன.
காலநிலை நிலைமைகளால் தற்போது ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் தொடர்ச்சியான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான திட்டங்களும் பரிசீலிக்கப்பட்டன.
மேலும், மஹா பயிர்ச்செய்கை பருவகாலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அது தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பை செப்டம்பர் 4ஆம் தேதி நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பாதிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களின் நிலைமையை மதிப்பீடு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களுடன் Zoom ஊடாக கலந்துரையாடலொன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.விசேட அமைச்சரவை உபகுழுவின் அடுத்த கூட்டம் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன, உபகுழுவின் செயலாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்னே மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வு) உள்ளிட்ட அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
