வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்தார்.அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், குறித்த சடலம் புதைக்கப்பட்ட இடத்தை யாரோ மர்ம நபர்கள் மீண்டும் தோண்டி, அதிலிருந்த தலையை மட்டும் அகற்றிச் சென்றுள்ளதாக உயிரிழந்தவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர். அதே மயானத்தில் அண்மையில் இடம்பெற்ற வேறொருவரின் இறுதிச் சடங்கின் போது, அப்பகுதியில் இருந்து வீசிய துர்நாற்றம் காரணமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.துர்நாற்றம் வீசிய இடத்தை பொதுமக்கள் சென்று பார்வையிட்ட போதே, சடலம் தோண்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
