நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி, ஒரு இளம் நட்சத்திரத்தைச் சுற்றி வாயு மற்றும் தூசுகள் சுழலும் மிகப்பெரிய வட்டு போன்ற அமைப்பைக் (Disk) கண்டறிந்துள்ளது. இது கோள்கள் உருவாகும் ஒரு பிரம்மாண்டமான களமாகும்.பிரபஞ்சத்தின் ரகசியங்களைத் தேடிப் பயணிக்கும் நாசாவின் ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி, இதுவரை மனிதகுலம் பார்த்திராத அளவில் மிகப் பிரம்மாண்டமான ‘கோள்களின் பிறப்பிடம்’ (Planet-forming disk) ஒன்றைக் கண்டறிந்து விஞ்ஞான உலகையே அதிரவைத்துள்ளது.பூமியிலிருந்து சுமார் 1,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள IRAS 23077+6707 என்ற இளம் நட்சத்திரத்தைச் சுற்றி இந்த பிரம்மாண்ட தூசு மண்டலம் சுழன்று கொண்டிருக்கிறது. இதன் மிரட்டலான தோற்றத்தைக் கண்டு வியந்த வானியலாளர்கள், இதற்கு “டிராகுலாவின் சிவிடோ” (Dracula’s Chivito) என்று பெயரிட்டுள்ளனர். இதன் பிரம்மாண்டத்தை எப்படித் தெரியுமா ஒப்பிடலாம்? நமது சூரிய குடும்பத்தின் எல்லையான ‘கைப்பர் பெல்ட்’ பகுதியை விட இது 40 மடங்கு பெரியது! அதாவது சுமார் 400 பில்லியன் மைல்கள் தூரம் வரை இந்த வாயு மற்றும் தூசுப் படலம் பரவிக் கிடக்கிறது.
பொதுவாக, கோள்கள் உருவாகும் இடங்கள் சீராகவும், ஒரு ஒழுங்கு முறையிலும் இருக்கும் என்றுதான் விஞ்ஞானிகள் இதுவரை நம்பி வந்தனர். ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பு அந்த நம்பிக்கையை உடைத்துள்ளது. இந்த வட்டு மிகவும் வன்முறையானதாகவும், கணிக்க முடியாத கொந்தளிப்புடனும் காணப்படுகிறது. ஒரு தட்டு போலச் சீராக இருக்க வேண்டிய இந்த அமைப்பு, இங்கு சிதைந்து போய், தூசுகள் மேலும் கீழும் சிதறி அலைகின்றன. ஒரு பக்கம் இருக்கும் கட்டமைப்பு மறுபக்கம் இல்லை. ஏதோ ஒரு வலிமையான சக்தி இதனைப் பிய்த்து எறிவது போலக் காட்சியளிக்கிறது.கோள்கள் உருவாக அமைதியான சூழல் தேவை என்ற விதியை இந்தக் கண்டுபிடிப்பு மாற்றி எழுதியுள்ளது. விண்வெளியின் மிகக் கடுமையான கதிர்வீச்சு, தீவிர ஈர்ப்பு விசை மற்றும் பயங்கரமான கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும் புதிய உலகங்கள் (கோள்கள்) உருவாக முடியும் என்பதை நிரூபித்துள்ளது. வானியலாளர்கள் ஒரு சுவாரசியமான கருத்தை முன்வைக்கின்றனர்: நமது சூரிய குடும்பம் உருவான ஆரம்பக் காலத்திலும் இதுபோன்ற ஒரு “வன்முறையான” சூழல் இருந்திருக்கலாம். அதை ஒரு மிகைப்படுத்தப்பட்ட கண்ணாடி வழியாகப் பார்ப்பது போலத்தான் இந்த ‘டிராகுலாவின் சிவிடோ’ அமைந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, பிரபஞ்சம் நாம் நினைப்பதை விட மிக விசித்திரமானது என்பதையும், கோள்கள் பிறப்பது என்பது ஒரு ‘அமைதியான நிகழ்வு’ அல்ல, அது ஒரு ‘மாபெரும் போர்’ என்பதையும் நமக்கு உணர்த்துகிறது.
