ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் Airbus விமான கொள்வனவு விவகாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி முன்வைக்கப்படும் மின்னஞ்சல் குற்றச்சாட்டுகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சட்டத்தரணி மனோஜ் கமகே நிராகரித்துள்ளார்.நாமல் ராஜபக்ஷவுக்கும் Airbus நிறுவனத்துக்கும் இடையில் நேரடி மின்னஞ்சல் தொடர்புகள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.மேலும், குறிப்பிடப்படும் மின்னஞ்சல்களில் நாமல் ராஜபக்ஷவின் பெயர் இடம்பெறவில்லை என்றும், விமான கொள்வனவு நடவடிக்கையுடன் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு இடையிலேயே அந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாகவும் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.எனவே, அந்த மின்னஞ்சல்கள் நாமல் ராஜபக்ஷவின் நேரடி தொடர்பை நிரூபிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.Airbus விமான கொள்வனவு விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் நிராகரித்துள்ளார்.அத்துடன், இந்தப் பரிவர்த்தனையுடன் தொடர்புடைய பணம் ஷமேந்திர ராஜபக்ஷவுக்கு சொந்தமான கணக்கில் வைப்பிலிடப்பட்டதாக முன்வைக்கப்படும் தகவல்களையும் அவர் மறுத்துள்ளார்.நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு முக்கியமாக வர்த்தகர் நிமல் பெரேரா வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவும் SLPP சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒருவரின் வாக்குமூலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அதனை உறுதிப்படுத்தும் சுயாதீன ஆதாரங்கள் இல்லாமல் ஒருவரை குற்றவாளியாகத் தீர்மானிக்க முடியாது என்றும் அவர் வாதிட்டுள்ளார்.இதனிடையே, அரசாங்கத்தின் சில தரப்பினர் இந்த விவகாரத்தை திரிபுபடுத்தி, பொதுமக்கள் மத்தியில் தவறான தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டம் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதாகவும் மனோஜ் கமகே குற்றஞ்சாட்டியுள்ளார்.நாமல் ராஜபக்ஷ தற்போது Airbus விமான கொள்வனவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி முறைகேடு மற்றும் பணச்சலவை விசாரணையில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளதுடன், செப்டம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.எவ்வாறாயினும், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
