திருத்தப்பட்ட **பெறுமதி சேர் வரி (VAT) விலைப்பட்டியல் முறைமை** எதிர்வரும் **2026 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும்** என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது.இது தொடர்பான திருத்தப்பட்ட விலைப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.புதிய VAT விலைப்பட்டியல் முறை ஆரம்பத்தில் 2026 ஜூலை 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வரி செலுத்துவோர் தங்களது கணக்கியல் மற்றும் விலைப்பட்டியல் மென்பொருள் அமைப்புகளை புதிய நடைமுறைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு அவகாசம் வழங்கும் நோக்கில் அதன் அமுலாக்கம் ஒத்திவைக்கப்பட்டது.
டிஜிட்டல் வரி வசூலை மேம்படுத்த நடவடிக்கை
டிஜிட்டல் வரி வசூல் நடைமுறையை ஒழுங்குபடுத்துவதுடன், வரி முறைமையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த மார்ச் 27ஆம் திகதி திருத்தப்பட்ட VAT விலைப்பட்டியல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களது கணக்கியல் மற்றும் பில்லிங் மென்பொருட்களை புதுப்பிப்பதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதாக பல வர்த்தக நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனைக் கருத்திற்கொண்டு, ஒக்டோபர் 1ஆம் திகதிக்கு முன்னர் கணக்கியல் மற்றும் விலைப்பட்டியல் அமைப்புகளை புதிய தேவைகளுக்கு ஏற்ப புதுப்பித்துக்கொள்ளுமாறு வர்த்தக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதிய முறைமையின் மூலம் போலியான விலைப்பட்டியல்களின் பயன்பாட்டைத் தடுப்பது, பரிவர்த்தனைகளை உரிய நேரத்தில் கண்காணிப்பது மற்றும் வரி வருவாய் கசிவைக் குறைப்பது ஆகியவை முக்கியமாக எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
