ரயில்வே துறையின் தற்போதைய பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில்வே தொழிற்சங்கங்கள் 48 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.நேற்று (16) நள்ளிரவு முதல் இந்த வேலைநிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.இதுகுறித்து கருத்து தெரிவித்த ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன, வேலைநிறுத்தம் ஆரம்பிக்குமுன்பே நேற்று பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாகவும், இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானதாகவும் தெரிவித்தார்.ரயில் சேவைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள இவ்வாறான பிரச்சினைகளும் தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கான காரணங்களில் ஒன்றாகும் என அவர் கூறினார்.ரயில்வே பொது முகாமையாளரும் நிர்வாக அதிகாரிகளும் தற்போது ரயில் சேவைகளை இயக்குவதற்கு முயற்சித்து வருவதாகவும், அதேவேளை ரயில்வே துறையின் வருமானத்தை அதிகரிப்பதற்கோ அல்லது பயணிகளுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கோ உரிய திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை என்றும் சுமேத சோமரத்ன குற்றஞ்சாட்டினார்.பெரும்பாலான ரயில் நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அதேவேளை, அரசாங்கத்திற்கு ஆதரவான சில நிலைய அதிபர்கள் வேலைநிறுத்தத்தை குழப்புவதற்கும், தற்போதைய ரயில்வே பொது முகாமையாளரை பதவியில் தொடரச் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.இந்த தொழிற்சங்கப் போராட்டம் அரசியல் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படவில்லை என்றும், ரயில்வே துறையை மீள ஒழுங்குபடுத்தி அதன் செயற்பாடுகளை மேம்படுத்துவதே நோக்கம் என்றும் சுமேத சோமரத்ன வலியுறுத்தினார்.வேலைநிறுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே நேற்று பிற்பகல் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன.இதன் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன், ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டமை தொடர்பில் பலர் தங்களது கருத்துகளையும் தெரிவித்தனர்.
