உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய 37 வயதுடைய பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்காக சென்றிருந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உடுவில் பிரதேச செயலகத்தின் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய, இரண்டு பிள்ளைகளின் தாயான நிசாந்தன் சிந்துப்பிரியா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அரச அலுவலகங்களுக்கு இடையிலான உற்பத்தித்திறன் போட்டிக்கான மதிப்பீடுகள் திங்கட்கிழமை நடைபெறவிருந்த நிலையில், அலுவலகத்தை சுத்தப்படுத்தி ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்காக விடுமுறை நாளான நேற்று (30) மாலை அலுவலகத்திற்கு வருமாறு ஊழியர்களுக்கு WhatsApp ஊடாக அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.இதன்படி அலுவலகத்திற்குச் சென்ற சிந்துப்பிரியா, அங்கிருந்த மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பற்ற மின் கசிவு நீருடன் தொடர்புற்றதால் மின்சாரம் தாக்கியதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் உடனடியாக மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையை அடைவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விடுமுறை நாளில் அலுவலகப் பணிக்காகச் சென்றிருந்த நிலையில் இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளமை குடும்பத்தினரையும் சக ஊழியர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
