இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளின் வெப்பநிலை 1°C வரை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.எல் நினோ (El Niño) தாக்கம் தொடர்ந்து காணப்படும் நிலையில், இந்த கடல் வெப்பநிலை அதிகரிப்பு நாட்டின் வானிலை நிலைமைகளை மேலும் மோசமாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் வெப்பநிலை சுமார் 3°C வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 8 மாதங்கள் முக்கியமான காலப்பகுதி
எல் நினோ நிலைமைகளின் தாக்கத்தால், இலங்கைக்கு அடுத்த எட்டு மாதங்கள் முக்கியமான காலப்பகுதியாக அமையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே பல மாவட்டங்கள் கடுமையான வறட்சியை எதிர்கொண்டு வருகின்றன. பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சில பாதிக்கப்பட்ட பகுதிகளில் செப்டெம்பர் மாத இறுதி வரை மழை கிடைக்காமல் போகக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு நீர் கட்டுப்படுத்தப்படலாம்
நீடிக்கும் வறட்சியால் நீரைச் சார்ந்த வாழ்வாதார நடவடிக்கைகள் 7 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளன.நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தகவல்படி, குடிநீர் தேவைக்காக நீர்த்தேக்கங்கள் மற்றும் குளங்களில் இருந்து நீர் வழங்குவது தொடர்ந்தும் உறுதி செய்யப்படும்.எனினும், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை வெளியிடுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
81,605 பேர் பாதிப்பு
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தகவலின்படி, இதுவரை 7 மாவட்டங்களில் உள்ள 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் 81,605 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் நீடிக்கும் வறட்சி நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.எதிர்வரும் மாதங்களில் இலங்கை நீடித்த வெப்பம் மற்றும் கடுமையான வறட்சியை எதிர்கொள்ளக்கூடிய சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
