இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகன நடத்துனர்களுக்கு 400,000 லீற்றர் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவவசம் இது குறித்துத் தெரிவிக்கையில்,எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட கியூ.ஆர். குறியீட்டு முறையின் கீழ் இந்த எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.இதில் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டும் உள்ளடங்குவதுடன், ஹோட்டல்களின் அத்தியாவசியத் தேவைகளுக்காக மேலதிக எரிபொருளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதேவேளை தினசரி நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த போதிலும், தற்போதைக்கு சுற்றுலாப் பொதிகளின் விலைகளில் மாற்றங்களைச் செய்யாமல் பழைய விலையிலேயே பேண சுற்றுலா நடத்துனர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
