2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியமை மற்றும் தாக்குதல்களுக்கு உதவி, ஒத்தாசை வழங்கியமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 25 பேருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்ற விசாரணை அமர்வே இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.
25 பேருக்கு எதிராக 23,270 குற்றச்சாட்டுகள்
சட்டமா அதிபர் சார்பில் 25 சந்தேகநபர்களுக்கு எதிராக மொத்தம் 23,270 குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சதித்திட்டம் தீட்டியமை, தாக்குதல்களுக்கு உதவி மற்றும் ஒத்தாசை வழங்கியமை, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்தமை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இதில் அடங்குகின்றன.ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பலரும் இந்த வழக்கில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.அவர்களில் நௌஃபர் மௌலவியும் ஒருவர்.
2019 ஈஸ்டர் தாக்குதல்கள்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்காகக் கொண்டு ஒருங்கிணைந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இந்த தாக்குதல்களில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.தாக்குதல்களைத் தொடர்ந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.இதன் பின்னர் சட்டமா அதிபர் 25 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து, வழக்கை மூவரடங்கிய விசாரணை அமர்வு முன்னிலையில் நடத்த நடவடிக்கை எடுத்தார்.நீண்டகாலமாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், செப்டெம்பர் 22ஆம் திகதி 25 பேருக்கும் எதிரான தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
